படையில் பணிசெய்த படைப்பாளி கண .முத்தையா

 

knm

படைப்பாளர் , பத்திரிகையாளர், மொழி பெயர்ப்பாளர் ,நூல் வெளியீட்டாளர் எனப் பல் வேறு துறைகளிலும் ஒளிவிட்டுத் துலங்கியவர் கண.முத்தையா அவர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில்  பங்குபற்றியுழைத்த  தியாகியாகவும் திகழ்ந்தவர்.

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்துப் போராட்டத்தை முன்னிலைப்படுத்திய சுபாஸ் சந்திர போஜின் இராணுவத்தில் முக்கிய ஸ்தானம் வகித்தவர். நாட்டுப்பற்றோடு விடுதலைக்காக உழைத்ததுடன் நூல் வெளியீடு படைப்பிலக்கியத்துறையிலும் தடம்பதித்து  இப் பெரியார்  நவம்பர் மாதம் 12 தேதி இயற்கை எய்தினார்.

சிவகங்கையில்  மதகுபட்டி என்ற கிராமத்தில் கடந்த 1913ஆம் ஆண்டு கண .முத்தையா பிறந்தார். 1930ஆம் ஆண்டு பர்மா சென்றடைந்தார். அங்கே நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் நாட்டுப்  பற்றாலும் கம்பீரமான வீரச் சொற் பொழிவுகளாலும் நன்கு கவரப்பட்டார் . விடுதலைப் போராட்டத்தில் தானும்  குதித்தார்.  நேதாஜி போசைக் கடைசி முறையாகச் சந்தித்த நால்வரில் கண.முத்தையா அவர்களும் அடங்குவர்.

1946 இல் பர்மாவைவிட்டு சென்னை   திரும்பிய இப்பெரியார்  ‘ தமிழ்ப்புத்தகாலயம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார், அதன் முதல்  பதிப்பாக “நேதாஜியின் புரட்சி” என்ற நூலை வெளியிட்டார் . “வால்காவிலிருந்து கங்கை வரை ” என்ற சாங்கிருத்யாயனின் நூலையும் ” பொதுவுடமை என்றால் என்ன?” என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

எழுத்தில் மட்டுமல்ல நடைமுறையிலும் கூட தமிழகத்துக்கு மாறான கருத்துக்களைக் கூறும் எந்தப் படைப்பையும் தூக்கி எரிந்து விடுவார், பிரசுரிக்க உடன்படமாட்டார். பர்மாவில் ” தன வணிகன்” என்றொரு இதழ் முன்னர் வெளியாகியது. அதன் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய கண.முத்தையா அவர்கள் பல கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வெளியிட்டார்.

தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு  பதிப்பாளார் சங்கம், தமிழ்நாடு எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் போன்ற பல அமைப்புகளில் இருந்து முக்கிய பொறுப்புகளை ஏற்று அவற்றின் முன்னேற்றத்திற்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தார்.

பிரபல நாவலாசிரியரான அகிலனுடைய மகன் அகிலன் கண்ணன் இவரது மகளை மணந்த முறையில் அகிலனுடைய சம்மந்தியானார்.

அகிலன்,ராஜம்கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, ஆகிய படைப்பாளிகளின் எழுத்துக்களையும், புதுமைப்பித்தன், க.நா.சு, தொ.மு.சி.ரகுநாதன்,கு.அழகிரிசாமி ஆகியோரின் படைப்புகளை பதிப்புச் செய்து இலக்கிய உலகுக்கு உதவினார்.

இவர் பதிப்பித்த நூல்களுக்கான ராயல்டியை ஒழுங்காக கணக்கு வைத்து , எழுத்தாளரிடம் கையளிப்பதில் மிகவும் நறுக்காக இருந்து தொழில் பட்டமையை மறக்க முடியாது.

இவர் பதித்த நூல்கள் பாரதீய ஞானபீடப்பரிசு, சாகித்ய அகாடமிப் பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜாசர் அண்ணாமலைப் பரிசு, இலக்கிய சிந்தனைப்பரிசு, பாரதீய பாசா பரிசத் பரிசு, ரங்கம்மாள் நினைவுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு எனப் பல்வேறு அமைப்புகளிலும்  பரிசில்களைப்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. – பத்மா சோமகாந்தன்  (வீரகேசரி

– 1998) ]

4



Leave a comment

Copyright warning

Copyright © 2023 by TAMILPUTHAKALAYAM DHAGAM, CHENNAI ALL RIGHTS RESERVED

All rights reserved. No part of this web site / publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of  Publisher : TAMILPUTHAKALAYAM DHAGAM

.

Newsletter